×

போக்குவரத்து போலீசாருக்கு சோலார் தொப்பி வழங்கல்: எஸ்.பி. நடவடிக்கை

திருவள்ளூர், மார்ச் 5: கோடைக்காலத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில், போக்குவரத்து போலீசாருக்கு நீர் மோர், தர்பூசணி, சோலார் தொப்பி, கூலிங் கிளாஸ் ஆகியவற்றை மாவட்ட எஸ்.பி., அரவிந்தன்  வழங்கினார். கோடை காலம் துவங்கிய நிலையில் மக்கள் உடல் வெப்பத்தை தணிப்பதற்கும், வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் பல முன்னேற்பாடுகளை செய்துகொள்வது வழக்கம். பலர் கோடைக் காலங்களில் வெளியில் நடமாடுவதையே தவிர்த்துவிடுவர்.

ஆனால், போக்குவரத்து போலீசார் எவ்வளவு வெயில் வெப்பத்தை உமிழ்ந்தாலும் அதை பொருட்படுத்தாமல் போக்குவரத்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு கடந்த 2012ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் மார்ச் முதல் ஜூன் வரையிலான 4 மாதங்கள் போக்குவரத்து போலீசாருக்கு சோலார் தொப்பி, கூலிங் கிளாஸ், எலுமிச்சை ஜூஸ் மற்றும் நீர்மோர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், போக்குவரத்து போலீசாருக்கு கோடைகால உபகரணங்கள் வழங்கும் விழா திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணபிரான் முன்னிலை வகித்தார். டவுன் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வரவேற்றார். இதில், மாவட்ட எஸ்.பி., அரவிந்தன் கலந்துகொண்டு, நகரில் பணியாற்றி வரும் போக்குவரத்து போலீசாருக்கு வெப்பத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் சோலார் தொப்பி, கண்களை பாதுகாத்துக் கொள்ள கூலிங் கிளாஸ் மற்றும் உடல் சூட்டை தணிக்கும் வகையில் எலுமிச்சை ஜூஸ் மற்றும் நீர் மோர் ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில், எஸ்.ஐ.க்கள் சக்திவேல், கோவிந்தன் உட்பட போக்குவரத்து போலீசார், ஆட்டோ டிரைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED பொன்னேரி அரசு கல்லூரி அருகே ஜம்பு சர்க்கஸ் தொடக்கம்